“நாடே வியக்கும் சின்னம் தவெகவுக்கு கிடைக்கும்” – செங்கோட்டையன் நம்பிக்கை

“நாடே வியக்கும் சின்னம் தவெகவுக்கு கிடைக்கும்” – செங்கோட்டையன் நம்பிக்கை

தவெகவுக்கு கிடைக்கப்போகும் சின்னத்தைக் கண்டு தமிழ்நாடே வியக்கப்போகிறது என அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் தவெக, தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு அளித்துள்ளது. கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று அதற்கான மனுவை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் வழங்கியிருக்கின்றனர்.
விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை, மைக்ரோஃபோன் உள்ளிட்ட 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட், பிகில் போன்ற படங்களில் விசில் முக்கியத்துவம் பெற்றிருப்பதாலும், மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க முடியும் என்பதாலும் தவெகவினர் 'விசில்’ சின்னத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “மிக விரைவிலேயே தவெகவுக்கு சின்னம் கிடைக்கப் போகிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், வெளியில் சொல்லக்கூடாது.
அந்தச் சின்னத்தைக் கண்ட பிறகு நாடே வியப்படையப் போகிறது. அஞ்சப்போகிறது. அந்தச் சின்னத்தை வெல்வதற்கு இனி தமிழ்நாட்டில் எந்த இயக்கத்தாலும் முடியாது.
ஆண்ட கட்சிகளே தான் ஆள வேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக்கூடாதா? ஏன் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? நல்லாட்சியை கொடுக்கக் கூடிய புதிய முகத்தை மக்கள் தேடிக்கொண்டே இருந்தார்கள். அந்த முகம் கிடைத்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.