"இந்தியாவில் இன்னும் தந்தை பெரியாரின் தேவை இருக்கிறது" - மேடையில் முழங்கிய கி. வீரமணி

"இந்தியாவில் இன்னும் தந்தை பெரியாரின் தேவை இருக்கிறது" - மேடையில் முழங்கிய கி. வீரமணி

இந்தியாவிற்கு இன்னமும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தேவைப்படுகிறது என தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.

திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு சட்டபேரவை முன்னாள் தலைவர் முனு ஆதியின் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுவிழா சென்னை தாம்பரத்தில் நேற்று (அக்.27) நடைபெற்றது. இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையேற்று நிறைவு உறையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ஆணவக்கொலை தடுப்பு சட்டத்திற்கான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 நாட்களில் நிறைவேற்றினார். சாதி வெறியால் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. இன்றும் பெரியாரும், திராவிட இயக்கமும் தேவைபடுகிறது. சாதிக்கு அடையாளம் உள்ளதா? சிவப்பாக இருந்தால் இந்த சாதி? கருப்பாக இருந்தால் இந்த சாதி என்று கூற முடியுமா? ரத்த தானம் செய்பவர்கள், மூளை சாவு அடைந்தவர்களின் உறுப்பை தானம் பெறும்போது சாதி, மதம் பார்க்கிறீர்களா?

நமது நாட்டில் கூலி பட்டாளம் பெருகிவிட்டது. அரசியலில் கூலி பட்டாளம் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை, இதனால்தான் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. சாதிய கொலைக்கு விடியல் சேர்க்கும் விதமாக, ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்திருக்கிறார். இதனை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சருக்கு எனது பாராட்டுகள். பழைய காலத்து சிறப்புகளை சொல்வது மட்டுமல்லாமல், ஒரு எழுச்சியோடு சாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பதவி என்பது மேல் துண்டு போன்றது, கொள்கை என்பது வேட்டி போன்றது’ என்று பேரறிஞர் அண்ணா கூறினார். தற்போது நிறைய பேருக்கு வேட்டியே (கொள்கை) இல்லை. எடுத்த உடனேயே முதலமைச்சர் பதவிதான் வேண்டும் என்கிறார்கள். எம்எல்ஏ, எம்பி, செயலாளராக வேண்டும் என்றெல்லாம் கிடையாது. இவற்றையெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு விளக்கி சொல்ல வேண்டியது கடமை.

இந்த விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மகேந்திரன், எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, மறைந்த சபாநாயகர் முனுஆதி மகன் ஆதிமாறன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.