தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் - தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் - தேர்தல் ஆணையம்

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், எஸ்.ஐ.ஆர் பணிகளும் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டன. மேலும், தமிழ்நாடு முழுவதும் மாவட்டவாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு, தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களும், குறிப்பாக சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 25ஆயிரத்து 18 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்காகவும், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்காகவும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் எதிர்ப்பு தொடர்பான அனைத்து பணிகளையும், ஜனவரி 18-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, அதனுடன் தொடர்புடைய படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த சிறப்பு முகாம்களின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தவறாக நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் சேர்த்தல், முகவரி திருத்தம், இரட்டை பதிவு நீக்கம், தொகுதி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்த இறுதி நாள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 13,03,487 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்தாகவும், அதே போல் வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபணைகள் குறித்து படிவம் 7 விண்ணப்பங்களை 35,646 பேர் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் தான், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஜனவரி 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.