நீலகிரியில் மூதாட்டியை தாக்கிய புலி சிக்கியது; பொதுமக்கள் நிம்மதி!
கூடலூர் பகுதியில் பொதுமக்களை கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் கடந்த வாரம் கால்நடைகளுடன் சென்ற மூதாட்டியை புலி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கூடலூர் பகுதியில் புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, தேவர் சோலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் அதிகரித்திருந்ததால் மனித–விலங்கு மோதலைத் தவிர்க்க வனத்துறை சிறப்பு இரும்பு கூண்டை வைத்தனர். அந்த கூண்டில் இரவு ஒரு புலி சிக்கியதால் அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் காலை முதலே புலி இருக்கும் கூண்டைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். மேலும் வனவிலங்கு மருத்துவர்கள் குழு புலியின் உடல்நிலை, மனஅழுத்தம், சுவாசம் உள்ளிட்ட அம்சங்களை நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அப்பகுதியில் நுழைய தடை விதித்துள்ளனர். சிக்கியுள்ள புலி பதற்றம் அடையக்கூடாது என்பதற்காக கூண்டு அமைந்துள்ள பகுதி முழுவதும் பொதுமக்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி எல்லைகளில் காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மக்கள் திரளாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புலியை பாதுகாப்பாக மாற்றுவதற்காக லாரி மற்றும் விலங்கு கையாளும் உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலி மாற்றப்படும் நேரத்தில் முழுமையான மௌன வளையம் (Silent Zone) கடைபிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
புலி பாதுகாப்பாக மாற்றப்பட்டதும் அதன் வயது, உடல்நிலை, விடுவிக்கப்பட உள்ள பகுதி போன்ற விவரங்களை அதிகாரப்பூர்வமாக வனத்துறை வெளியிட உள்ளது. தேவர்சோலை வனப்பகுதியில் நடமாடிய புலி கூண்டில் சிக்கியதை தொடர்ந்து பொதுமக்களிடையே சற்று அச்சத்தை போக்கி உள்ளது.
மேலும், பல நாட்களாக கண்காணிப்பு பணியில் வனத் துறையினர் மற்றும் வனப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டதன் பலனாக புலி கூண்டில் சிக்கி உள்ளதால் வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் கூண்டில் சிக்கியுள்ள புலியை அடர்ந்த வனப்பகுதியில் விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.