ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு! கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத்திற்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவாயிலில் (எண் 1) பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது வினோத்திடம் இருந்து வெடிக்காத நிலையில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் இருப்பது தெரிய வந்தது. அதனை காவலர்கள் பாதுகாப்பாக பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கருக்கா வினோத்தும் கைது செய்யப்பட்டார்.
மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்போது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தமிழ்நாடு காவல் துறையிடம் இருந்து என்.ஐ.ஏ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கைதான கருக்கா வினோத்திற்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் சுமார் 680 பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் என்.ஐ.ஏ தாக்கல் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்றைய விசாரணையின் போது என்.ஐ.ஏ தரப்பு வழக்கறிஞர் என். பாஸ்கரன் ஆஜராகி, குற்றம்சாட்டப்பட்ட வினோத் தான் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். உள்நோக்கத்துடன் தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். எனவே அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்'' என கேட்டுக் கொண்டார்.
என்.ஐ.ஏ தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ். மலர்விழி, கருக்கா வினோத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதனால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.