தள்ளிப்போகும் 'ஜனநாயகன்' ரிலீஸ் - மீண்டும் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பவும், தனி நீதிபதி மீண்டும் விசாரிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி தணிக்கை வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி ஏற்ற தணிக்கை வாரியம், டிச 22 ஆம் தேதி படத்தை பார்வையிட்டது. அதன் பின்னர், திரைப்படத்தில் சில காட்சிகளை மாற்றம் செய்தால் U/A 16+ சான்றிதழ் வழங்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் சில காட்சிகளை நீக்கிய தயாரிப்பு நிறுவனம், பின்னர் டிசம்பர் 24 ஆம் தேதி தணிக்கைக்கு படத்தை மீண்டும் அனுப்பியது. இதையடுத்து, ஜனநாயகன் படத்துக்கு U/A 16+ சான்று வழங்க முடிவு செய்துள்ளதாக, தணிக்கை குழு சார்பில் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு டிசம்பர் 29 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
பதிவேற்றம் செய்யாததால் ஏற்பட்ட சிக்கல்
இறுதியாக, சான்றிதழுக்காக படத்தை தணிக்கை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முயன்றும் படக்குழுவால் முடியவில்லை. அதனால், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் பின்னர் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் "பாதுகாப்பு படை சின்னம்" குறித்து காட்சிகள் இருப்பதால் திரைப்படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப இருப்பதாக தணிக்கை வாரிய தலைவர் சார்பில், படக்குழுவுக்கு ஜனவரி 5 ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே சில காட்சிகளை நீக்கியதால் UA 16+ சான்றிதழ் வழங்க முடிவு செய்த பின்பு, மறு ஆய்வுக்கு படத்தை அனுப்ப வேண்டும் என்ற வாரிய தலைவர் முடிவை எதிர்த்து படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜனநாயகன் திரைப்படத்தில் போதுமான மாறுதல்களை செய்ததால் UA 16+ சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய தணிக்கை வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தணிக்கை வாரியத்துக்கு கால அவகாசம் தராமல் தீர்ப்பு வழங்கியது தவறு என தெரிவித்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவில் தலையிட முடியாது என உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கடந்த 20ஆம் தேதி தணிக்கை வாரியம் மற்றும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் காலை முதல் மாலை வரை வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்ததையடுத்து, அன்றே வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப உத்தரவு
இந்நிலையில், தலைமை நீதிபதி எம்.எம் ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வு ஜனநாயகன் படத்தின் தீர்ப்பை இன்று (ஜன 27) வழங்கியது. அதில், ஆய்வுக்குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள மத அடையாளங்கள் மற்றும் பாதுகாப்பு படை சின்னம் தொடர்பான காட்சிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பாதுகாப்பு படை சின்னம் பயன்படுத்தப்பட்டதால் ‘ஜனநாயகன்’ படம், நிபுணர் குழு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதில் எந்த தவறும் இல்லை. அதனால், சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தணிக்கை வாரியத்துக்கு போதிய அவகாசம் கொடுத்து, தனி நீதிபதி மீண்டும் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.