மாணவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு...முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

மாணவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு...முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, ஆர்.கே.பேட்டை, கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மோகித் எனும் மாணவர் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் அவர் பள்ளிக்கு சென்றிருந்தபோது, திடீரென பள்ளி வளாகத்தில் உள்ள கைப்பிடி சுவர் இடிந்து மாணவர் மீது விழுந்தது.
இதில், மோகித் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். மகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொடுக்க மறுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர் மோஹித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி உதவியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோஹித் (வயது 12) என்பவர் இன்று (16.12.2025) நண்பகல் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.