ஊறவைத்த வெந்தயம் - ஆரோக்கியத்திற்கு நல்லதா?
பல ஆயிரம் ஆண்டுகளாக அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக வெந்தயம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கே, நார்ச்சத்து, இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
ஊறவைத்த வெந்தயத்தை தினசரி எடுத்துக்கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தினசரி காலை ஊறவைத்த வெந்தயத்தை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து வயிற்று ஆரோக்கியத்திற்கு நல்லது செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள். இது மலச்சிக்கல், வாயு, அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
எடை குறைக்க விரும்புவோர் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். வெந்தயத்தில் காணப்படும் புரதம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் தசை வலிமைக்கு பெரிதும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெந்தயம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. கூடுதலாக, உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குளுக்கோஸை விரைவாக உறிஞ்சுவதைத் தடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.