சினிமா பாணியில் மாமூலுக்காக தம்பதி மீது கள்ளச்சாரய வழக்கு: சிக்கிய 3 காவலர்கள்
மாமூல் வாங்குவதற்காக தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் கைது செய்து சிறையில் அடைந்த மூன்று காவலர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி, சென்னை பிடாரியம்மன் கோயில் தெருவில், தண்ணீர் கேன் போடுவது போல கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாகக் கூறி வனிதா என்பவரை மயிலாப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், தண்ணீர் கேனுடன் 20 லிட்டர் கள்ளச்சாராயம் மறைத்து வைத்து இருந்தது பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயத்தை கணவர் அப்துல்லா மூலம் வாங்கி வந்து, வனிதா விற்பனை செய்து வந்ததாகவும், இவர் மீது சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்ட வழக்கு இருக்கிறது எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் கள்ளச்சாராயம் எப்படி ஊடுருவியது என விசாரிக்க, உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும், வனிதாவின் கணவர் அப்துல்லாவை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும், வழக்கின் விசாரணைக்காக சிசிடிவி காட்சிகளுடன் பல ஆதாரங்களை தனிப்படை காவல்துறையினர் சேகரித்தனர். அப்போது, வனிதாவும் அவரது கணவரும் கள்ளச்சாராயத்தை கடத்தவில்லை என்பது விசாரணையில் அம்பலமானது.
இருப்பினும், சென்னை மயிலாப்பூரில் பிடிபட்ட கள்ளச்சாராயம் எங்கிருந்து வந்தது என விசாரணை மேற்கொண்டதில், சென்னை அடையாறை சேர்ந்த பார்த்தி என்பவர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பார்த்தியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மூன்று காவலர்கள் தன்னை, வனிதா மற்றும் அவரது கணவரை கள்ளச்சாராய வழக்கில் சிக்க வைப்பதற்காக, ஆந்திராவில் இருந்து கள்ளச் சாராயத்தை கடத்தி வந்து, அவர்கள் விற்பனை செய்து வரும் வாட்டர் கேன்களோடு வைக்கச் சொன்னதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே வனிதா மீது சட்டவிரோத மது விற்பனை விவகாரத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், சந்தேகம் வராத அளவிற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அடிப்படையில் இதை செய்ததாக தெரியவந்துள்ளது.
இதற்குக் காரணம் தன்னை அணுகிய மூன்று காவலர்களுக்கு, வனிதா மற்றும் அவரது கணவர் மாமூல் தராததால், இருவரையும் சிக்க வைப்பதற்காக, இது போன்ற செயலில் அவர் ஈடுபட்டதும் அம்பலமாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாமூலுக்காக பொய் வழக்கு போட வைத்த மூன்று காவலர்கள் மீது, துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்காக காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில், மாமூல் தராத நபர்களை, கள்ளச்சாராய விற்பனை செய்ததாக காவலர்களே சிக்க வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “மயிலாப்பூர் காவல் நிலைய எல்லையில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், சில காவலர்களுக்கு மாமூல் செல்வது தடைப்பட்டுள்ளது. காவல் நிலைய எல்லையில் கள்ளச்சாராயம் விற்பனை வழக்கில், இவர்களை சிக்க வைத்து அதன் மூலம் மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளரை இடமாற்றம் செய்து விடலாம் என்று எண்ணி, இது போன்ற வேலைகளில் மூன்று காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் சென்னை காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.