தமிழ்நாட்டில் உள்ள உட்கட்டமைப்புகளில் சாதி பெயர்களை நீக்க அரசு உத்தரவு!

குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகளில் உள்ள சாதி சார்ந்த பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இன்று (அக்.8) வெளியிட்டுள்ள அரசாணையில், ''முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஏப்ரல் 29, 2025 அன்று அறிவித்தபடி, காலனி என்ற சொல்லை அரசின் ஆவணங்களிலும் பொதுப் பயன்பாட்டிலிருந்தும் நீக்கும் நடவடிக்கையுடன், சமூகத்தில் பாகுபாடுகளை ஒழிக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தங்களது எல்லைக்குள் உள்ள சாதிப்பெயர்கள் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை அடையாளம் காண வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஆதிதிராவிடர் காலனி, பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்ற பெயர்கள் மாற்றம் செய்யப்படும். புதிய பெயர்கள் பொதுவான மற்றும் சாதிச்சார்பற்றவையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, முல்லை, செண்பகம் ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் தெருக்கள், சாலைகளுக்கு திருவள்ளூவர், பாரதியார், காந்தி, பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோரின் பெயர்களை வைக்கலாம் என எடுத்துக்காட்டு கூறப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்களையும், மதிப்பீட்டையும் அடிப்படையாகக் கொண்டு பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும். இதற்காக கிராம சபை மற்றும் ஏரியா சபைகளின் ஒப்புதலும் பெறப்படும்.
அத்துடன், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வழியாக பெயர் மாற்றங்கள் குறித்த அறிவிக்கைகள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்படும். மாற்றங்கள் செய்யப்பட்டதும், நிலப் பதிவுகள், குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள் மற்றும் அரசு ஆவணங்களில் உள்ள பெயர்களும் தானாக திருத்தப்பட உள்ளன.
இந் நடவடிக்கை அக்டோபர் 14, 2025க்குள் மதிப்பீடும், அக்டோபர் 17க்குள் பொதுமக்கள் ஆலோசனையும் பெற்று அக்டோபர் 24க்குள் அறிவிக்கை வெளியீட்டு ஆட்சேபனை கருத்துகள் பெற வேண்டும். மேலும் நவம்பர் 19க்குள் சம்பந்தப்பட்ட மன்றக் கூட்டத்தில் பொருள் வைத்து மாவட்ட அரசிதழில் அறிவிக்கை வெளியிட அறிவிக்கப்பட்டுள்ளது'' என அதில் கூறப்பட்டுள்ளது.