“திமுகவோடு மோதும் அளவுக்கு எதிரிகளுக்கு வலிமை இல்லை” - அமைச்சர் ரகுபதி

“திமுகவோடு மோதும் அளவுக்கு எதிரிகளுக்கு வலிமை இல்லை” - அமைச்சர் ரகுபதி

திமுகவோடு மோதுகின்ற அளவுக்கு எதிரிகளுக்கு வலிமை இல்லை என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று (ஜன.25) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அதிமுக ஒரு பகுதியும், பாஜக ஒரு பகுதியுமாக இணைந்த கூட்டணிதானே தவிர, அது வலுவான கூட்டணி இல்லை. பலவீனமான கூட்டணிதான். அது எத்தனை கட்சிகளோடு வந்தாலும் இண்டியா கூட்டணியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழக மக்களின் மனதில் உள்ளவர்கள்தான் வெல்ல முடியுமே தவிர, கூட்டத்தைக் கூட்டி யாரும் வெல்ல முடியாது.

தமிழக மக்களின் மனநிலையை ஒவ்வொரு சர்வே மூலமும் அறிந்துள்ளோம். திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அதன் மூலம் தங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் அதன் மூலம் தெரியவந்துள்ளது. இத்தகைய தமிழக மக்களின் விருப்பத்தை பிரதமர் மோடியாலோ, மற்றவர்களாலோ புரிந்துகொள்ள முடியாது.

வரும் தேர்தல் திமுகவுக்கு கடைசி சேர்தல் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறுகிறார் எனில், 11 முறை தோல்வியைச் சந்தித்த அவருக்கு 12-வது தோல்வியை வரும் தேர்தல் தரும்.

தேர்தலுக்காக பிரதமர் மோடி ஆயிரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் அவை தேர்தலில் எதிரொலிக்காது. கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்று, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கும் கட்சிதான் திமுக. எங்களை நம்பி வருபவர்கள் கெட்டுப்போக மாட்டார்கள். மற்ற கட்சிகளுக்கு செல்பவர்கள்தான் மோசம் போவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திமுக கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் முடிவு செய்வார். அதை பற்றி பேசுவதற்கு எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவைப் பற்றி கடுமையாக விமர்சித்துவிட்டு அதே கட்சியோடு டிடிவி.தினகரன் கூட்டணி சேர்ந்திருப்பது வெட்கக் கேடானது. எதிர்க்கட்சிகள் கூட்டும் கூட்டத்தைவிட திமுகவின் மகளிர் அணி, இளைஞர் அணியின் மூலம் அதிக கூட்டத்தை கூட்டி காண்பித்து இருக்கிறோம். விரைவில் மண்டலம் வாரியாக பூத் கமிட்டியைக் கூட்ட உள்ளோம். பகுதி, பகுதியாக மக்கள் அலையைக் கொண்டு வந்து சேர்க்கும் சக்தி இந்தியாவில் திமுகவுக்கு மட்டும் தான் உண்டு.

நாங்கள் எப்போதும் எதிரிகள் இல்லை என்று கூறும் இறுமாப்பு பிடித்தவர்கள் அல்ல. எதிரிகள் இருக்கிறார்கள். ஆனால், எங்களோடு மோதுகின்ற அளவுக்கு அந்த எதிரிகளுக்கு வலிமை இல்லை என்றுதான் கூறுகிறோம். திமுகவின் வெற்றிக்கான கவுண்டவுன் தொடங்கி உள்ளது" என்றார்.