முதன்முறையாக ஊருக்குள் வந்த பேருந்து... கிராம மக்கள் உற்சாகம்!

முதன்முறையாக ஊருக்குள் வந்த பேருந்து... கிராம மக்கள் உற்சாகம்!

பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், முல்லையூரில் இருந்து அரியலூருக்கு நேரடி பேருந்து வழித்தடத்தை இன்று தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் முல்லையூர் ஊராட்சிக்கு, இத்தனை ஆண்டு காலமாக நேரடி பேருந்து வசதி கிடையாது. முல்லையூர் மக்கள் தங்கள் கிராமத்திலிருந்து தத்தனூர் அல்லது அருகே உள்ள தளவாய் கிராமத்திற்கு ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அரியலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முல்லையூரில் இருந்து அரியலூருக்கு நேரடி பேருந்து வழித்தடத்தை அமைச்சர் சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சிவசங்கர், கிராம மக்களை பேருந்தில் ஏறச் சொன்னார். வரிசையாக பேருந்திக்குள் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏறிக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் கையைப் பிடித்து "எங்களின் நீண்ட கால கனவு சார், ரொம்ப நன்றி" என்றவாறு கைக் குலுக்கி நன்றி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பேருந்து படிக்கட்டில் ஏறி உள்ளே சென்ற ஒருவர், மீண்டும் வேகமாக கீழிறிங்கி ஆசையுடன் இரண்டாவது முறையாக படிக்கட்டில் ஏறியவர் எங்களின் கனவு இது என்றபடி கத்திக் கொண்டே பேருந்தில் அமர்ந்தார்.

பயணி ஒருவர் கூறுகையில், "எங்களது தலைமுறையில் இதுவரை எங்கள் ஊருக்கு பேருந்து வந்தது கிடையாது. இப்போது மகிழ்வுடன் பேருந்து ஏறி பார்த்துகிறோம், எங்களுக்கு ரொம்ப ஹாப்பி" என்று கூறி இரு கைகளையும் உயர்த்தி காட்டி மகிழ்ந்தார்.

பேருந்து நடத்துனர் பயணிகளுக்கு சாக்லேட்டுகள் வழங்கியதும், பயணிகள் நடத்துனர் மற்றும் ஓட்டுநரின் கைப் பிடித்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்ட காட்சி காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.