குழந்தைகள் பலி எதிரொலி: மருந்து உற்பத்தியாளர்களை கண்காணிக்க இனி சிறப்பு குழுக்கள் - மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

குழந்தைகள் பலி எதிரொலி: மருந்து உற்பத்தியாளர்களை கண்காணிக்க இனி சிறப்பு குழுக்கள் - மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

: மருந்து உற்பத்தியாளர்களை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 'கோல்ட் ட்ரிப்' என்ற இருமல் மருந்தை தடை செய்வது பற்றி சட்டசபையில் அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து இருந்தனர். இதற்கு பதில் அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று, மத்தியப் பிரதேசம் மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் இருந்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது. அக்கடிதத்தில் 04.09.2025 முதல் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு தொடர்புடையதாக கருதப்படுகிற கோல்ட் ட்ரிப் சிரப் குறித்த விவரம் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து துணை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் உத்தரவின் பேரில் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் (Senior Drugs Inspector) தலைமையிலான குழு ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) விற்பனையை தடை செய்தது.

மேலும், மேற்கூறிய நிறுவனத்தில் இருந்து ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிஃப் மருந்து விநியோகிக்கப்பட்ட தகவல் கிடைத்த விபரம் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல் 02.10.2025 அன்றே மேல்நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய மருந்தை பற்றிய விவரங்கள் எல்லா மருந்துகள் ஆய்வாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு 02.10.2025 அன்று கோல்ட்ரிஃப் சிரப் முடக்கம் செய்யப்பட்டதும் அல்லாமல் ஸ்ரீசன் பார்மா தயாரித்த அனைத்து மருந்துகளும் முடக்கம் செய்யப்பட்டன.

மேலும், மாநிலம் மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களிடம் இருந்த கோல்ட்ரிஃப் சிரப்பின் மொத்த இருப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் (Criminal) நடவடிக்கை மேற்கொள்ள C-2 சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் 08.10.2025 அன்று புகார் கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு மருந்து நிறுவனத்திலும் மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டாய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருந்தும், இந்த நிறுவனம் தொடங்கிய 2011 ஆம் ஆண்டு முதல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்நிறுவனம் ஒருமுறை கூட ஆய்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்திலுள்ள 397 மருந்து உற்பத்தி நிறுவனங்களில், திரவ நிலை மருந்து (Syrup) தயாரிக்கும் 50 மருந்து நிறுவனங்களில் கடந்த ஒரு வாரத்தில் முழு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வாரத்தில் மேலும் 52 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது முழு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இனி வரும் காலங்களில் மருந்து உற்பத்தியாளர்களை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.