சிலம்பரசன் கொடுத்த சர்ப்ரைஸ்! - ‘அரசன்’ ப்ரோமோவால் தியேட்டர்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

சிலம்பரசன் கொடுத்த சர்ப்ரைஸ்! - ‘அரசன்’ ப்ரோமோவால் தியேட்டர்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

தியேட்டர்களில் வெளியான ‘அரசன்’ பட ப்ரோமோவுடன், தனது ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் சேர்த்து வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ள திரைப்படம் ‘அரசன்’. இந்த கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின்மீது ரசிர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

'அரசன்' திரைப்படத்தின் கதையானது, ’வடசென்னை’ திரைப்பட கதையை ஒட்டியே இருக்கும் என இயக்குநர் வெற்றிமாறன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசை அமைப்பார் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் வெற்றிமாறனுடன் இணைந்துள்ளார் அனிருத். 5 நிமிடத்திற்கு மேல் ஓடும் ‘அரசன்’ திரைப்பட ப்ரோமோ தமிழ்நாட்டிலுள்ள பல திரையரங்குகளில் நேற்று மாலை வெளியானது.

இதனையொட்டி சிம்புவின் ரசிகர்கள் தியேட்டர்களுக்குச் சென்று ப்ரோமோவை மகிழ்ச்சியுடன் பார்த்தனர். ரசிகர்களோடு ப்ரோமோவை பார்ப்பதற்காக படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் மிஷ்கின், சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் சென்னை கமலா தியேட்டருக்கு வருகை தந்தனர்.

ப்ரோமோ வீடியோவில் பிரபலமான ரவுடி (சிலம்பரசன்) தன்னுடைய வாழ்க்கை கதையை படமாக எடுப்பதற்காக இயக்குநர் நெல்சனிடம் விவரிப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சிலம்பரசன் நெல்சனிடம், ‘படத்தில் இருக்கக்கூடிய காட்சிகள் அனைத்தும் கற்பனையே’ என்று போட்டு விடுங்கள்; ஏனெனில் அப்பொழுதுதான் சட்ட சிக்கல்கள் வராமல் தவிர்க்க முடியும் என கூறுகிறார்.

மேலும், என்னுடைய “கதையில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறீர்கள்?” என சிலம்பரசன் கேள்வி எழுப்ப, அதற்கு இயக்குநர் நெல்சன் “உங்கள் மனதில் யாராவது இருப்பார்களே?” என கேட்க, சிலம்பரசன் அதற்கு பதில் கூறும் விதமாக, “தனுஷை நடிக்க வையுங்கள், சூப்பராக நடிப்பார்” என கூறுகிறார். இதனால் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் தனுஷ் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ப்ரோமோ வெளியீட்டுக்கு பிறகு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வீடியோவில் தோன்றிய நடிகர் சிலம்பரசன், ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். அந்த வீடியோவில், ”அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன், உங்களோடு சேர்ந்து ப்ரோமோ பார்க்கலாம் என நினைத்தேன். இருப்பினும், பல்வேறு காரணங்களால் அது முடியவில்லை. விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து, “இந்த நேரத்தில் என்னுடைய ரசிகர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், பசியாக இருக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும், அன்னதானம் செய்யுங்கள். இதை செய்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்” எனக் கூறிவிட்டு, கடைசியாக “Love you All. நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என சிம்பு பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து ‘அரசன்’ படத்தின் ப்ரோமோவானது இன்று காலை (அக்.17) இணையதளத்தில் வெளியாகியுள்ளது.