சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய வடகிழக்கு பருவமழை: நெக்ஸ்ட் பிளான் இது தான், துணை முதலமைச்சர் கூறுவது என்ன?

சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய வடகிழக்கு பருவமழை: நெக்ஸ்ட் பிளான் இது தான், துணை முதலமைச்சர் கூறுவது என்ன?

மழை நீர் தேங்கியிருப்பது குறித்து வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும் பருவமழையானது இந்த ஆண்டு சற்று விரைவாகவே தொடங்கி விட்டது. மேலும், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அக்டோபர் 24 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவடைய வாய்ப்பு உள்ளது. அப்போது புயல் உருவாகும் வாய்ப்புள்ளது.

பொதுவாக வடகிழக்கு பருவ மழை சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக மழை பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கேற்ப அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீரை உறிஞ்சும் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்த கனமழையில் சென்னையில் பல்வேறு பகுதியிகளில் மழை நீர் சூழந்தது. அவை அடுத்த 4 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து மழைநீர் வடிகால், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக வேளச்சேரி மழைநீர் வடிகால் தூர் வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டார். இதற்கு பின், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,46,950 நபர்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று காலை உணவு வழங்கினார். அதனையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காலை 4 மணி முதல் மழை பாதிப்பு குறித்து நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறோம். முகாம்களில் உணவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வரும் புகார்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை மாநகராட்சி கட்டுப்பட்டு அறைக்கு நானே நேரடியாக சென்றேன். அங்கு சில புகார்களை கேட்டறிந்து, நானே அந்த பகுதிகளுக்கு வருகிறேன் என்று கூறினேன்.

டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, பார்வையிடுவதற்கு அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் பேசியிருக்கிறார். சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழை பாதிப்பு குறித்து விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.