குறைந்த அளவு மது அருந்துவதும் வாய் புற்றுநோய் அபாயத்தை 50% அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!

குறைந்த அளவு மது அருந்துவதும் வாய் புற்றுநோய் அபாயத்தை 50% அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்கள். ஆனால் மதுவை பொறுத்தவரை அந்த அளவு என்பது மிக குறைவாக இருந்தாலும் அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. பொதுவாக அதிகப்படியான குடிப்பழக்கம் மட்டுமே புற்றுநோயை உண்டாக்கும் என்று பலர் நம்பி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, மிகக் குறைந்த அளவு மது அருந்துபவர்களுக்கும் வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

கோப்புப்படம்

டாடா மெமோரியல் சென்டர் (Tata Memorial Centre) மற்றும் பிஎம்ஜே குளோபல் ஹெல்த் (BMJ Global Health) இதழ் இணைந்து வெளியிட்ட இந்த ஆய்வில், இந்திய ஆண்களிடையே மது அருந்துவதற்கும் 'புக்கால் மியூகோசா' (Buccal Mucosa) எனப்படும் கன்னத்தின் உட்புறம் மற்றும் உதடுகளில் ஏற்படும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு ஆராயப்பட்டது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கிய தகவல்கள் பின்வருமாறு.

பாதுகாப்பான அளவு என்று ஏதுமில்லை: இந்த ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், மது அருந்துவதில் "பாதுகாப்பான அளவு" (Safe limit) என்று எதுவுமே கிடையாது. ஒரு நாளைக்கு வெறும் 9 கிராம் (சுமார் ஒரு சிறிய கிளாஸ்) மது அருந்தினால் கூட வாய் புற்றுநோய் வரும் அபாயம் 50% அதிகரிக்கிறது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுவகை: வெளிநாட்டு மதுவகைகளை விட உள்ளூர் மதுவகைகளான சாராயம், போன்றவற்றால் ஆபத்து மிக அதிகம். உள்ளூர் மது அருந்துபவர்களுக்கு புற்றுநோய் அபாயம் 87% வரை அதிகரிக்கிறது. இதுவே சர்வதேச தரத்திலான மது அருந்துபவர்களுக்கு 72% ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக இரண்டும் ஆபத்தானது.

புகையிலை மற்றும் மது: இந்தியாவில் புகையிலை மெல்லும் பழக்கம் ஏற்கனவே அதிகமாக உள்ளது. புகையிலையுடன் மதுவையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது, அந்த அபாயம் நான்கு மடங்காக அதாவது 400 % உயருகிறது. மதுவில் உள்ள எத்தனால், வாயின் உட்புற சவ்வின் ஊடுருவும் தன்மையை மாற்றி, புகையிலையில் உள்ள நச்சுக்கள் எளிதாக உடலுக்குள் செல்ல வழிவகுக்கிறது.

வாழும் இடம் மற்றும் வயது: நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கே இந்த புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது. குறிப்பாக 35 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், 25 வயதுடைய இளைஞர்களிடமும் இந்நோய் பரவலாக காணப்படுவது கவலையளிக்கும் விஷயமாகும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

இந்தியாவின் நிலை: இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 1,00,000 ஆண்களில் சுமார் 15 பேருக்கு இந்நோய் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 43 சதவீதத்தினர் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் சூழல் உள்ளது. குறிப்பாக மேகாலயா, அசாம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மதுவினால் ஏற்படும் வாய் புற்றுநோயின் தாக்கம் 14 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

கூடுதல் தகவல்கள்:

  • வாய் புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படாவிட்டால், அது தாடை எலும்புகள் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்குப் பரவி அறுவை சிகிச்சையை மிகவும் கடினமாக்கும்.
  • மது மற்றும் புகையிலை ஆகிய இரண்டையும் முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் இந்தியாவில் 62% வாய் புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மது அருந்துவதில் ஆரோக்கியமான அளவு என்று ஒன்று கிடையாது. அது எந்த வகையாக இருந்தாலும் அது நம் உயிரைப் பறிக்கும் புற்றுநோய்க்கு நுழைவுச் சீட்டாக அமைகிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்விற்கு மது மற்றும் புகையிலை இரண்டையும் முற்றிலுமாகத் தவிர்ப்பதே ஒரே தீர்வாகும் என்கிறது ஆய்வுகள்.