ஆஷஸ் ஆல் டைம் பேட்டர்கள் பட்டியல்! நெருங்க முடியாத உச்சத்தில் டான் பிராட்மேன்!

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
அதன் பின், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக டிசம்பர் 4ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. மூன்றாவது போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டிலும், நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னிலும், கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4 ஆம் தேதி சிட்னியிலும் நடைபெறவுள்ளது. மேலும் கடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், இம்முறை எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடரில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில், ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
டான் பிராட்மேன்
பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன். இவர் 1928-48ஆம் ஆண்டு வரை 37 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர், 19 சதங்களையும், 12 அரைசதங்களையும் குவித்ததுடன், 89.78 என்ற சராசரியில் 5,028 ரன்களைக் குவித்து, தற்போதும் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தற்போது அவரது சாதனையை முறியடிக்க வாய்ப்பிருக்கும் வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் மட்டும் தான். ஆனால் அவர்கள் கிட்டத்தில் 2ஆயிரன் ரன்கள் பின் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் பேரி ஹாப்ஸ்
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள வீரர் இங்கிலாந்தின் ஜான் பெர்ரி ஹாப்ஸ். 1908 முதல் 1930ஆம் ஆண்டு வரையிலும் 41 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹாப்ஸ், 12 சதங்கள், 15 அரைசதங்கள் என 54.26 என்ற சராசரியில் 3,636 ரன்களை எடுத்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதனால் நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இவரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடிப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.
ஸ்டீவ் ஸ்மித்
தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித்திற்கு இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ஸ்மித்தை பொறுத்தவரையிலும் 2010ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலும் 37 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 13 அரைசதங்களுடன் 56.21 என்ற சராசரியுடன் 3,417 ரன்களை எடுத்துள்ளார். மேலும் அவர் இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 220 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், இந்த பட்டியலில் ஜான் பெர்ரி ஹாப்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலன் பார்டர்
இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வீரர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். இவர் கடந்த 1978 முதல் 93 வரை 42 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 7 சதங்களையும், 19 அரைசதங்களையும் விளாசியுள்ளதுடன் 55.55 என்ற சராசரியில் 3,222 ரன்களைச் சேர்த்து, இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.
ஸ்டீவ் வாக்
இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்துள்ளவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தான். அவர் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவானான ஸ்டீவ் வாக். அவர் 1986 முதல் 2003ஆம் ஆண்டு வரையிலும் 45 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 10 சதங்கள், 14 அரைசதங்களை விளாசிவுள்ளார். இதன் மூலம் அவர் 58.75 என்ற சராசரியுடன் 3,173 ரன்களைக் குவித்து இந்த பட்டியலில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விளையாடி வரும் வீரர்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 2428 ரன்களுடன் 17ஆவது இடத்திலும், பென் ஸ்டோக்ஸ் 1,562 ரன்களுடன் 56ஆம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 1,378 ரன்களுடன் 70ஆவது இடத்திலும், மார்னஸ் லபுஷாக்னே 1016 ரன்களுடன் 97ஆவது இடத்தையும், டிராவிஸ் ஹெட் 910 ரன்களுடன் 114ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.