“தமிழிளம் தலைமுறையை மோசமாக சீரழித்த போதைப் பழக்கம்” - திருத்தணி சம்பவத்தில் சீமான் ஆதங்கம்
“திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவுக்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கத்துடன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தம்பி சிராஜ் மீது, போதைப் பழக்கத்திற்கு அடிமையான நான்கு இளம் சிறார்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது. அத்தனை சமூக அவலங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கையாலாகாத்தனம் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மலிவுவிலை மதுக்கடைகளால் சட்டம் - ஒழுங்கு முற்றாகச் சீரழிந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் வேகமாகப் பெருகிவருகின்றன. சொந்த இரத்த உறவுகள் கூடச் சிறு சிறு முன்பகைக்காக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகும் சமூகப்பேரவலம் நிகழ்வதற்கு அரசு விற்கும் மதுதான் அடிப்படை காரணமாகிறது. அதுமட்டுமின்றி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காத அளவிற்கு வளர்ந்து கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மது மற்றும் கஞ்சா போதையில்தான் நடைபெறுகிறது. எனவே அரசு மது விற்பனையைத் தடைசெய்தாலே தமிழ்நாட்டில் நடைபெறும் 95% கொடுங்குற்றங்கள் நடைபெறாமலேயே தடுத்து நிறுத்த முடியும்.
‘போதையின் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டாம்’ என்று காணொளி பேசினால் மட்டும் போதைப் பொருட்கள் புழக்கம் ஒழிந்துவிடுமா? அல்லது தமிழ்நாட்டு இளைஞர்கள் அதைப் பயன்படுத்தாமல் தடுத்திடத்தான் முடியுமா? இளம் சிறார்கள் போதையில் கொடூர ஆயுதங்களுடன் தாக்கிய காணொளிக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? மது, கஞ்சா போதையைக் கட்டுப்படுத்தாது இன்னும் எத்தனை உயிர்களை திமுக அரசு பலி கொடுக்கப்போகிறது?
ஆகவே, வடமாநில தொழிலாளி தம்பி சிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதல்போல இனி ஒரு கொடூர நிகழ்வு நடந்திடாமல் தடுத்திடவும், சீரழியும் தமிழிளம் தலைமுறையைக் காத்திடவும், மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதோடு, கஞ்சா விற்பனையை முற்று முழுதாக தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்’ என சீமான் தெரிவித்துள்ளார்.