கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் இன்று கனமழை

'கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி, தென்காசி, வேலுார் மாவட்டம் அம்முண்டி ஆகிய இடங்களில், தலா, 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி, வேலுார் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில், தலா, 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில், இரு வேறு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 19 வரை, சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், நாளை கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.