தத்தளிக்குமா சென்னை? வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள போவது எப்படி! நடவடிக்கைகளை விளக்கும் அரசு!

தத்தளிக்குமா சென்னை? வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள போவது எப்படி! நடவடிக்கைகளை விளக்கும் அரசு!

கனமழை அபாயத்தை கருத்தில் கொண்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்கான நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அக்.17 காலை முதல் அக்.22 நேற்று வரை சென்னையில் சராசரியாக 169.30 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதில் நேற்று மட்டும் சராசரியாக 4.66 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 0.30 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

மழையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதிகள், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக, நேற்று (அக்.22) 68 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, 1,48,450 நபர்களுக்கு காலை உணவும், 76 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 2,20,950 நபர்களுக்கு மதிய உணவும், 15 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 27,000 நபர்களுக்கு இரவு உணவும் என மொத்தம் 3,96,400 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதில் மாநகராட்சிக்கு சொந்தமாக 36 படகுகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 60 பேர், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 30 பேர் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர்.