'கடனை திருப்பி தராத இளைஞரை கடத்தி நகை பறிப்பு' - தொழிலதிபர் கைது!
வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத இளைஞரை கடத்தி சென்று மிரட்டி நகையை பறித்து சென்ற தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவர், சென்னை ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முகேஷ் சூளையை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் ஜெயின் என்பவரிடம் ரூ. 10 லட்சம் கடனாக பெற்றதாக தெரிகிறது.
இந்த கடனில் முகேஷ் சிறுக சிறுக ரூபாய் 8 லட்சம் திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதம் 2 லட்சம் கொடுக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வெளியே முகேஷ் குப்பை கொட்டச் சென்றார். அப்போது காரில் வந்த ராஜேஷ் ஜெயின் திடீரென முகேஷை காரில் ஏறும்படி கூறியதாக தெரிகிறது. அவர் வீட்டிற்குள் சென்று உடை மாற்றி விட்டு, காரில் சென்றார். தொடர்ந்து அவரை பெரியமேடு பகுதிக்கு ராஜேஷ் அழைத்து சென்றார்.
அங்கு வைத்து முகேஷிடம் மிரட்டி மீதி பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அவர் விரைவில் தருகிறேன் என கூறிய நிலையில், அவர் கழுத்தில் அணிந்திருந்த 41 கிராம் தங்க நகைகளை பறித்த ராஜேஷ், ரூபாய் 10 லட்சத்திற்கு வெற்று பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இது குறித்து முகேஷ் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தொழில் அதிபர் ராஜேஷ் ஜெயினை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரூபாய் 25 லட்சம் பணம் கடனாக கொடுத்ததாகவும், முகேஷ் 6 லட்சம் திருப்பி தந்த நிலையில் மீதியுள்ள 19 லட்சத்தை கேட்க வீட்டிற்கு சென்றபோது வீட்டில் பேச வேண்டாம் என்றும், வெளியே செல்லலாம் என்றும் கூறி தனது உடையை மாற்றிக் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
மேலும், ராஜேஷ் ஜெயின் பெரியமேடு அப்பா ராவ் கார்டன் குடியிருப்பில் உள்ள அலுவலகத்தில் வைத்து முகேஷிடம் எழுதி வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து வியாசர்பாடி போலீசார் காயம் ஏற்படுத்துதல், கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலதிபர் ராஜேஷ் ஜெயினை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.