இந்திய அணியை இரண்டாவது முறையாக வீழ்த்திய சவுதி அரேபியா
கூடைப்பந்து உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் சவுதி அரேபியா இரண்டாவது முறையாக இந்தியாவை வீழ்த்தியது.
வருகின்ற 2027ஆம் ஆண்டு கூடைப்பந்து உலகக் கோப்பை போட்டி கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. 2027 உலகக் கோப்பை கூடைப்பந்து தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதும். அந்த போட்டிகளின் முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 2ஆம் கட்ட தகுதிச் சுற்று போட்டிகளுக்கு முன்னேறும். இறுதிக்கட்டமாக 7 அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
போட்டி நடத்தும் நாடான கத்தார் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், மற்ற அனைத்து அணிகளும் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. முதல் சுற்றில் 12 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சவுதி அரேபியா, லெபனான், கத்தார், இந்தியா ஆகிய அணிகள் டி பிரிவில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 27ஆம் தேதி ரியாத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில், இந்திய அணி 51–75 என்ற புள்ளிகள் கணக்கில் சவுதி அரேபியாவிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தியா, சவுதி அரேபியா அணிகளுக்கு இடையேயான தகுதி சுற்று போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சவுதி அணியை பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியின் தொடக்கம் முதல் தாக்குதல் மிக்க ஆட்டத்தை சவுதி அணி வெளிப்படுத்தியது. முதல் கால் பகுதியில் 12 - 4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த முன்னிலை வைத்து தொடர்ந்து இறுதி நேரம் வரை அந்த அணி ஆட்டத்தை கட்டுப்படுத்தியது.
ஆட்டநேர முடிவில், சவுதி அரேபியா 81–57 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. இதன் மூலம், சவுதி அரேபியா இந்திய அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக வீழ்த்தி முக்கியத்துவமான வெற்றியை பெற்றுள்ளது.