574 ரன்கள்! 3 வீரர்கள் அதிரடி சதம்! அடுத்தடுத்து சாதனை

574 ரன்கள்! 3 வீரர்கள் அதிரடி சதம்! அடுத்தடுத்து சாதனை

அருணாசலப் பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணி 397 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் ராஞ்சியில் நடந்த போட்டியில் அருணாசலப் பிரதேசமும், பீகாரும் மோதின.

முதலில் பேட் செய்த பீகார் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்களை குவித்தது. இது முதல் தரக் கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.

அதேநேரத்தில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் இதுவே மிக அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதேபோல், 2வது முறையாக 500க்கும் மேல் ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த 2 ஸ்கோர்களும், அருணாசல பிரதேச அணிக்கு எதிராகவே எடுக்கப்பட்டுள்ளன. முதலில் 2002ல் அருணாச்சல் அணிக்கு எதிராக தமிழக அணி 506 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து தற்போது பீகார் அணி 574 ரன்களை குவித்துள்ளது.

பீகார் அணி பேட்ஸ்மேன்கள் 3 பேர், மிக குறைந்த பந்துகளில் அதிரடியாக சதம் விளாசியுள்ளனர். சூரியவன்சி அதிகபட்சமாக 190 ரன்களை விளாசியுள்ளார். அதற்கடுத்து சகிபுல் கனி 128 ரன்களும், ஆயுஸ் லோகுரா 116 ரன்களும் விளாசினர். பியூஸ் சிங் 77 ரன்கள், மங்கோல் மகரூர் 33 ரன்களும் எடுத்தனர்.

அருணாச்சல் பந்துவீச்சாளர் மிபோம் மொசு 9 ஓவர்களை வீசி 116 ரன்களை விட்டுக் கொடுத்து, அதிக ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை புரிந்தார். இதேபோல் மேலும் 2 பந்துவீச்சாளர்கள் மோசமாக பந்துவீசி,  தலா 9 ஓவர்களில் 99, 98 ரன்களை வாரி வழங்கினர்.

இதன்பின்னர் விளையாடிய அருணாசலப் பிரதேச அணி, 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பீகார் அணி 397 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் அபார வெற்றி பெற்றது.