தஸ்மின் பிரிட்ஸின் அபார சதத்தால் முதல் வெற்றியை ருசித்த தென்னாப்பிரிக்கா!

தஸ்மின் பிரிட்ஸின் அபார சதத்தால் முதல் வெற்றியை ருசித்த தென்னாப்பிரிக்கா!

 நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நேற்று நடைபெற்ற 7வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, தென்னாப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார்.

சோஃபி டிவைன் அசத்தல்

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர் சூஸி பேட்ஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மற்றொரு தொடக்க வீராங்கனையான ஜார்ஜியா பிளிம்மரும் 31 ரன்களிலும், அமெலியா கெர் 23 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் சோஃபி டிவைன் - ப்ரூக் ஹாலிடே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சோஃபி டிவைன் தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

அரைசதத்தை நெருங்கிய ப்ரூக் ஹாலிடே 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய சோஃபி டிவைனும் 85 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் சோபிக்க தவறியதன் காரணமாக, நியூசிலாந்து மகளிர் அணி 47.5 ஓவர்களில் 231 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தஸ்மின் பிரிட்ஸ் அதிரடி

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த தஸ்மின் பிரிட்ஸ் - சுனே லஸ் இணை சிறப்பாக விளையாடி, விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தஸ்மின் பிரிட்ஸ் சதமடித்தும், சுனே லஸ் அரைசதம் கடந்து அசத்தினர்.

இதன் மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 169 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பின் 15 பவுண்டரிகள், ஒருசிக்ஸர் என 101 ரன்களை எடுத்த நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மரிஸான் கேப் 14 ரன்களிலும், அன்னெக் போஷ்க் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுனே லஸ் 83 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய தஸ்மின் பிரிட்ஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து-வங்கதேசம் மகளிர் அணிகள் கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.