பொங்கல் நிகழ்ச்சியில் நடனம்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவலர்கள்

பொங்கல் நிகழ்ச்சியில் நடனம்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவலர்கள்

பொங்கல் நிகழ்ச்சியில் காவலர்கள் நடனமாடிய வீடியோ வைரலாக நிலையில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் அனைவரும் கோலகாலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் காவலர்கள் பொங்கல் பண்டிகையை கடந்த சில நாட்களாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் பதுவாஞ்சேரியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதில் காவல் ஆணையகத்திற்குப்பட்டு அனைத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் தனித்தனியாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக குரோம்பேட்டை, பல்லாவரம் காவல் நிலையங்களில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியின் போது ஆண், பெண் காவலர்கள் சிலர் நடனமாடினர். இதை மற்ற காவலர்கள் நின்று வேடிக்கை பார்த்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வைரலானது.

இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகள் தாம்பரம் காவல் ஆணையர் கவனத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் பல்லாவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் பழனிவேல், குரோம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயால் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல் இரண்டு காவல் நிலையங்களிலும் பணிபுரிந்து வரும் ஐந்து காவல் உதவி ஆய்வாளர்களும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 4 காவல் ஆய்வாளர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கும் பணியிட மாற்றம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள காவலர்கள் இடையே இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காவலர்கள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் நிகழ்ச்சியின் போது நடனமாடிய காவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் வேடிக்கை பார்த்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேதனை அளிப்பதாக சில போலீசார் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உயர் காவல்துறை அதுகாரிகளிடம் பேசியபோது, நிர்வாக காரணங்களால் மட்டுமே காவல்துறை ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.