மருதநாயகம் திரைப்படம் சாத்தியம்தான்: கமல்ஹாசன் உறுதி
பல தொழில்நுட்பங்கள் முன்னேறி இருக்கும் இந்த காலத்தில், மருதநாயகம் திரைப்படம் சாத்தியம் தான் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜியில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழா வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் இந்த ஆண்டு இந்திய பனோரமாவின் கீழ் திரையிட தமிழ்நாட்டில் இருந்து 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ளன. அதன்படி சிவகார்த்திகேயனின் 'அமரன்', நடிகர் அப்புக் குட்டியின் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' மற்றும் இவி கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள 'ஆநிரை' என்ற குறும்படம் ஆகியவை இந்த விழாவில் திரைப்பட உள்ளன.
இதற்காக சென்னையில் இருந்து அமரன் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் விமான மூலம் கோவா புறப்பட்டனர். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அமரன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, திரைப்படக் குழுவினருடன் கோவா புறப்பட்டுள்ளோம்.
அரசியலில் எப்படி இருந்தாலும் சரி. சினிமா, நாடு என்று வந்தால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். நாட்டுக்கு தேவையான படத்தை நாங்கள் எடுத்துள்ளோம். இதற்கு நாடு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எங்களுடைய எதிர்பார்ப்பு நியாயமானது தான். இது போன்ற படங்கள் நிறைய எடுக்கப்பட வேண்டும். முப்படைகள் பற்றிய திரைப்படங்களும் எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் ஸ்டாலின் செல்லாதது குறித்து கேட்ட போது, ”அரசியல் குறித்தான கேள்வி வேண்டாம். நான் இப்போது சினிமா தொடர்பான நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள செல்கிறேன்” என்றார். மருதநாயகம் திரைப்படம் குறித்து கேட்ட போது, “மருதநாயகம் திரைப்படத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. பல தொழில்நுட்பங்கள் முன்னேறி இருக்கும் இந்த காலத்தில், அதுவும் சாத்தியம் என்பது தான் எனது எண்ணம்” என்றார்.
இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “அமரன் திரைப்படம் கடந்த ஒரு வருடமாக அதிகம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் அதிகம் கொடுத்து கொடுக்கும் என நம்புகிறேன்” என கூறினார். இதனைத்தொடர்ந்து, அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில், ”இந்திய தேசிய திரைப்பட விழாவில் ’அமரன்’ திரைப்படம் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோல்டன் பீகாக் என்கிற விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வாகியுள்ள மூன்று படங்களில் அமரன் படமும் அடங்கும்.
இதனை முக்கிய கௌரவமாக நான் கருதுகிறேன். அனைத்து இயக்குநர்களும் வெற்றியை நோக்கி தான் உழைக்கின்றனர். புதிய இயக்குநர்கள் சிறந்த கதையை எழுதி கடின உழைப்பு மூலமாக சிறந்த படங்களை எடுக்க வேண்டும். எனது அடுத்த படத்துக்கான அப்டேட்கள் விரைவில் வரும். சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றியது இனிமையான அனுபவங்கள்” என கூறினார்.