சல்மான் ஆகா அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 பொட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சைம் அயுப் 6 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
மேற்கொண்டு நிதானமாக விளையாடி வந்த ஃபகர் ஜமான் 32 ரன்களுக்கும், நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 29 ரன்களுக்கும், முகமது ரிஸ்வான் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த சல்மான் ஆகா மற்றும் ஹுசைன் தாலத் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட சல்மான் ஆகா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஹுசைன் தாலத் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 62 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த சல்மான் ஆகா 9 பவுண்டரிகளுடன் 105 ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்து விளையாடிய முகமது நவாஸ் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 299 ரன்களைச் சேர்த்தது.
இலங்கை தரப்பில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கும் பதும் நிஷங்கா - அறிமுக வீரர் கமில் மிஷாரா இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இதில் பதும் நிஷங்கா 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் குசால் மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரரான கமில் மிஷரா 38 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 39 ரன்களிலும், கேப்டன் சரித் அசலங்கா 32 ரன்களிலும், ஜனித் லியானகே 28 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணிக்கும் நம்பியையும் கொடுத்தார்.
பின்னர் 59 ரன்களில் ஹசரங்கா விக்கெட்டை இழக்க, இலங்கை அணி இறுதிவரை போராடிய நிலையிலும் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.