ஓமனை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!

ஓமனை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!

 ஓமன் அணிக்கு எதிரான ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில், இந்தியா ஏ மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஓமன் அணியில், கரண் சொனவலே மற்றும் கேப்டன் ஹம்மத் மிர்ஸா இணை தொடக்க ஆட்டகாரர்களாக களம் இறங்கினர். இதில் மிர்ஸா ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் கரண் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.

பின்னர் களமிறங்கிய வசிம் அலி, அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினார். அதேசமயம், கேப்டன் மிர்ஸா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் வசிம் அலி தனது அரைசதத்தை பதிவு செய்தார். ஆனால், அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

இதன் காரணமாக ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்தது. இதில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் வசிம் அலி 54 ரன்களைச் சேர்த்தார். இந்திய ஏ அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

ஹர்ஷ் தூபே அசத்தல்

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.இதில், நமன் தீர் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நெஹல் வதேராவும் 23 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த ஹர்ஷ் தூபே அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன் மூலம் இந்திய ஏ அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஏ அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹர்ஷ் தூபே ஆட்டநாயகன் விருதை வென்றார்.