தமிழ் பல்கலை. இணையதளத்தில் மீண்டும் எம்ஜிஆர் படம் - சைதை துரைசாமி
தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் மீண்டும் எம்ஜிஆர் படத்தை பதிவேற்ற வேண்டும் என்று சைதை துரைசாமி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட எம்ஜிஆர் பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்த நாள் விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ் பயிற்சி அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன் பின்னர் சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு "பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்று பெயர் சூட்டிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சையில் 900 ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேல் டிரோன் மூலம் படம் எடுத்தால் கட்டடங்கள் அனைத்தும் தமிழ்நாடு என்ற எழுத்து வடிவில் இருக்கும்.
இப்படி தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த எம்.ஜி.ஆர் புகைப்படம், பெயர் ஆகியவை பல்கலை கழகத்தின் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு போகும் என்று சில பேர் நினைத்தால் அது நடக்காது. உடனடியாக எம்ஜிஆர் புகைப்படம், பெயர் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்வர் கவனம் செலுத்தி மீண்டும் இணையதள பக்கத்தில் இடம்பெற செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என சைதை துரைசாமி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் எம்ஜிஆர் வேடம் அணிந்து மாறுவேடத்திலும், சிறு குழந்தைகள் பல்வேறு தோற்றங்களில் உள்ள எம்ஜிஆர் புகைப்படத்தை வரைந்து போட்டியில் பங்கேற்று அசத்தினர். முன்னதாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சைதை துரைசாமி வழங்கினார். இந்த விழாவில் எம்.ஜி.ஆர் பேரவை நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பழனியப்பன், ஜனார்த்தனன், ராஜ்குமார், வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.