தவெக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
தவெக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இடம்பெறுவார்கள் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தஅவர், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
விஜய்யால் வரும் சட்டமன்ற தேர்தலில் 2-வது இடத்தை பிடிக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், ''தமிழக வெற்றிக் கழகம் புதிய வரலாற்றை படைக்கக்கூடிய இயக்கமாகத்தான் எதிர்காலத்தில் அமையப் போகிறது. மக்களின் நிலை என்ன என்பதை களத்தில் தான் காண வேண்டும். இந்தியாவில் செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் முதலிடத்தில் விஜய் உள்ளார். இரண்டாவது இடத்தில் தான் பிரதமர், மூன்றாவது இடத்தில் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்த முதல்வர் விஜய் தான் என்பதை காலம் பதில் சொல்ல இருக்கிறது.
திமுக ஆட்சியின் போது எம்ஜிஆர் வெளியே வந்து தான்தான் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றைப் படைத்தார். அதுபோல, விஜய் வருவார்.. முதல்வர் ஆவார்.. என்று தான் மக்கள் ஆர்ப்பரித்து தவெக கூட்டத்திற்கு வருகிறார்கள்'' என்றார்.
தவெகவில் இன்னும் யாரெல்லாம் இணையவுள்ளனர் என்ற கேள்விக்கு, ''பொங்கல் வரை பொறுத்திருங்கள். அதற்குள் எத்தனை பேர் வருகிறார்கள் என்று பாருங்கள். டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தவெக கூட்டணியில் இடம்பெறுவார்கள்'' என தெரிவித்தார்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து பேசிய செங்கோட்டையன், '' மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஒரு வரலாற்றைப் படைத்துள்ளது. அங்கு பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தான் சாலையில் ரோடு ஷோ நடத்தப்படும். பொதுவாக அங்கு டிராஃபிக் ஜாம் ஆகாது. ஆனால் விஜய்யின் வருகையால் அங்கு இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஆன வரலாறும் பதிவாகியுள்ளது'' என்றார்.
ஜாக்டோ ஜியோ கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்தான கேள்விக்கு, ''அரசாணை எவ்வாறு இருக்கிறது என்று முழுமையாக தெரிந்து கொண்ட பிறகுதான் பதில் அளிக்க முடியும். மேலும் இது தேர்தல் அறிவிப்புதான். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார்