டிரம்பை கண்டாலே பீதி; அம்பானி, அதானியின் கட்டுப்பாட்டில் இயக்கம் - பீகாரில் மோடியை விளாசிய ராகுல்

டிரம்பை கண்டாலே பீதி; அம்பானி, அதானியின் கட்டுப்பாட்டில் இயக்கம் - பீகாரில் மோடியை விளாசிய ராகுல்

 பிரதமர் மோடி டிரம்பை பார்த்து பயப்படுவது மட்டுமின்றி, அம்பானி, அதானியின் கட்டுப்பாட்டில் (ரிமோட் கண்ட்ரோல்) அவர் இருப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நவ.6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக நவ.11 ஆம் தேதி 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் நவ.14ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், பீகாரின் பெகுசராய் மற்றும் ககாரியா மாவட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (நவ.2) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மெல்லிய உடலமைப்பை கொண்டிருந்தாலும், அந்த காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார் மகாத்மா காந்தி. ஆனால், 56 அங்குலம் மார்பளவு இருப்பதாக பெருமை பேசும் மோடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் சண்டையை நிறுத்துமாறு கூறியதும் பீதியடைந்தார். அடுத்த இரண்டே நாளிலேயே சண்டை முடிவுக்கு வந்தது.

1971ஆம் ஆண்டு நடந்த போரில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்க படையால் அச்சுறுத்தப்பட்டார். ஆனால், அவர் துளி கூட அஞ்சவில்லை. ஆனால் மோடி டிரம்பிற்கு பயப்படுவது மட்டுமல்லாமல்ஸ அம்பானி - அதானியின் கட்டுப்பாட்டில் தான் அவர் இயங்கி வருகிறார். அதாவது அவரை இயக்கும் ரிமோட் கண்ட்ரோலாக பெரிய தொழிலதிபர்கள் உள்ளனர்.

தேர்தல் நடக்கும் போதும் மட்டும் பீகாருக்கு வரும் மோடி, வாக்குக்காக எதையும் செய்வார். அவரை யோகா செய்ய சொல்லுங்கள் செய்வார்.. ஏன் ஓட்டுக்காக மேடையில் நடனம் கூட ஆடுவார். தேர்தல் நாள் வரை நீங்கள் என்ன சொன்னாலும் செய்யும் மோடி, தேர்தல் முடிந்த பிறகு தனக்கு பிடித்த நிறுவனங்களுக்காக மட்டுமே வேலை செய்வார். குறிப்பாக, அதானி அம்பானியுடன் சேர்ந்து ஆடி பாடுவார்.ஆகையால், இவை அனைத்து நாடகமே.

வேலையின்மை போன்ற பிரச்சனைகள் குறித்து நீங்கள் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காகவும், உங்களின் கவனத்தை திசை திருப்பவுமே இளைஞர்களை ரீல்ஸ் பார்க்க சொல்லுகிறார். இதற்காகவே பாஜக உங்களுக்கு மலிவான இணையதள வசதியை வழங்கியுள்ளது. அதனால், உங்களால் ரீல்ஸ் பார்க்கவும், ரீல்ஸ் உருவாக்க மட்டுமே முடியும். நீங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ரீல்ஸ்களை பார்க்கும்போது, அதன் மூலம் வரும் பணம் அனைத்தும் அம்பானிக்கே செல்கிறது" என்று ராகுல் காந்தி பேசினார்.