தேனி: ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை வழிபட்டு மக்கள் உற்சாகம்

தேனி: ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை வழிபட்டு மக்கள் உற்சாகம்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மேய்ச்சல் மாடுகளை சுற்றி நின்று வணங்கி பொதுமக்கள் மரியாதை செய்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே மாடுகள் வைத்திருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் அவற்றை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூஜை செய்து கரும்பு மற்றும் சர்க்கரை பொங்கலை சாப்பிட கொடுத்து மகிழ்ந்தனர்.

அந்த வகையில், இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள சித்தார்பட்டி கிராமத்திலும் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் மற்ற பகுதிகளை போன்று இல்லாமல் இவ்விழாவானது இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.

சித்தார்பட்டி கிராமத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பது பிரதான தொழிலாக இருக்கிறது. இந்த கிராமத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை மேய்ச்சலுக்காக பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதுண்டு. இந்த கிராம மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிற மாடுகளுக்கு, மாட்டுப் பொங்கல் தினத்தன்று கிராம மக்கள் அனைவரும் சிறப்பு பூஜை நடத்துகின்றனர். அதனாலேயே இங்கு தைப்பொங்கலை விட மாட்டுப் பொங்கல் பிரசித்தம்.

இந்த ஆண்டும், கிராம மக்கள் அனைவரும் மாடுகளுக்கும் மாட்டுத் தொழுவங்களுக்கும் தோரணங்கள் கட்டி மலர் மாலைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து மாடுகளை தெய்வமாக கருதி வழிபட்டனர். மாடுகளுக்கு பொங்கல் மற்றும் கரும்பு போன்ற உணவுகளை வழங்கி மகிழ்வித்தனர். அதன்பிறகு, ஊர் மக்கள் அனைவரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை ஒரு தொழுவத்தில் அடைத்து வைத்து, அதன் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பறை மற்றும் மணியடித்து அனைத்து மாடுகளையும் ஒரே நேரத்தில் மேய்ச்சலுக்கு திறந்துவிட்டனர். தொழுவத்தை திறந்ததும் பாய்ந்து வந்த மாடுகளை கண்டு ஊர்மக்கள் மகிழ்ச்சி கூச்சலிட்டனர். .

ஊர் பெண்கள் அனைவரும் ஒரே நிறத்தில் புடவை உடுத்தி இருக்க, இளைஞர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் டி-ஷர்ட் அணிந்து மாட்டுப் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.