6 நாளுக்கு பிறகு குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்

6 நாளுக்கு பிறகு குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்

பீகாரை சேர்ந்த இளைஞர் சென்னையில் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவியின் உடல் காவல் துறையின் ஆறு நாள்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது.

சென்னை அடையாறில் கடந்த 26 ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. அன்றைய தினம் காலையில், அடையாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரத்தக் கறை படிந்த சாக்கு மூட்டையை போலீசார் கைப்பற்றினர். அதை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்ததை கண்டு ஒரு கணம் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

தலைநகரையே அதிரவைத்த இக்கொலை சம்பவம் குறித்த அடையாறு காவல் துணை கண்காணிப்பாளர் ஹரிஹரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொலை செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்றும், அவர் தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்ததது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.

வேலைத் தேடி குடும்பத்துடன் சென்னைக்கு வந்த இவர், தமது சொந்த மாநிலத்தின் அலிப்பூர் பகுதியைச் சேர்ந்த சத்யேந்தர் என்கிற சந்தோஷகுமாரிடம் (30) தமக்கு காவலாளி வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

கோட்டூர்புரத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பகல் நேர வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்த சத்யேந்தர், நிச்சயமாக வேலை வாங்கித் தருவதாக கௌரவ் குமாருக்கு உறுதி அளித்துள்ளார். அவரது சொல் பேச்சை நம்பி, கடந்த 24-ம தேதி குடும்பத்துடன் சத்யேந்தர் அழைத்த இடத்துக்கு சென்ற கௌரவ் குமாரை, தான் பணிபுரியும் கல்லூரி வளாகத்தில் பயன்பாட்டில் உள்ள ஒரு கட்டடத்தின் 4-வது தளத்தில் சத்யேந்தர் தங்க வைத்துள்ளார்.

இனி எல்லாம் சுகமே என்று எண்ணியிருந்த கௌரவ் குமாருக்கு அன்றிரவே அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடன் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் பீகாரை சேர்ந்த லலித் யாதவ் (40), கொட்டிவாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேனாக பணிபுரியும் பீகார் மாநிலத்தை சேர்ந்த விகாஷ் குமார் (24) ஆகியோருடன் சத்யேந்தர் மது அருந்தியுள்ளார். அவர்களுடன் சேர்ந்து கவுரவ் குமாரும் அருந்தியதாக கூறப்படுகிறது.

மது போதை தலைக்கேற, சத்யேந்தர் மற்றும் அவரது நண்பர்கள், கவுரவ் குமாரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனை கவுரவ் குமார் தடுக்க முற்பட்டபோது ஏற்பட்ட தகராறில், நண்பர்கள் சேர்ந்து கவுரவ் குமாரை கொலை செய்தததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட பீகார் மாநிலத்தவர்கள்
கொலை செய்யப்பட்ட பீகார் மாநிலத்தவர்கள் 

அதாவது, கௌரவ் குமாரின் உடலை அடையாறு பகுதியிலும், அவரது மனைவியின் உடலை பெருங்குடி குப்பைக் கிடங்கிலும், அவரது குழந்தையின் உடலை கால்வாயிலும் வீசி சென்றுள்ளனர்.

கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து சத்யேந்தர், லலித் யாதவ், விகாஷ் குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து அடையாறு காவல் ஆய்வாளர் இளங்கனிடம் கேட்டபோது, "கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் மட்டும் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என இதுவரை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தை இழைத்தவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுதர அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

உடல் கண்டெடுப்பு

இதனிடையே, ஏற்கெனவே கவுரவ் குமாரின் உடல் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், அவரது குழந்தையின் சடலம் மத்திய கைலாஷ் பக்கிங்காம் கால்வாயில் நேற்று மீட்கப்பட்டது. இந்நிலையில், அவரது மனைவி புனிதா குமாரியின் சடலத்தை பெருங்குடி குப்பைக்கிடங்கில் இருந்து போலீசார் இன்று கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே, அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.