துல்கர் சல்மானின் படப்பிடிப்பு தளத்திற்கு 'சர்ப்ரைஸ் விசிட்' தந்த மம்முட்டி
துல்கர் சல்மான் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை நடிகர் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார்.
மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘ஐ அம் கேம்’ (IM GAME) திரைப்படம். துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமான ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக மலையாள சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற ‘RDX’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் ‘ஐ அம் கேம்’ படத்தில் நடிகரும், இயக்குநருமான மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏற்கனவே ‘ஐ அம் கேம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு தளத்திற்கு துல்கர் சல்மானின் தந்தையும், மலையாள சினிமா உலகின் பிரபல நடிகருமான மம்முட்டி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், சண்டை பயிற்சியாளர்கள் அன்பு, அறிவு, நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

‘ஐ அம் கேம்’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் மம்மூட்டி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘RDX’ திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.
கடைசியாக செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்சே, சமுத்திரகனி, ராணா டக்குபத்தி உள்ளிட்ட பலர் நடித்த காந்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்திய சினிமாவில் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமான ‘ஐ அம் கேம்’ திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.