செந்தில் பாலாஜி அமைச்சராவதை தடுக்கவில்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி!

செந்தில் பாலாஜி அமைச்சராகக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. வேண்டுமானால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அவர் மீண்டும் அமைச்சராகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்த 2011 -2015 அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணையின் போதே, அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த திமுக, அவரை மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக நியமித்தது. இதனையடுத்து, பண மோசடி வழக்கின் தொடர்ச்சியாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை அன்றிரவே கைது செய்தது.
கைதானதை அடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜிக்கு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமின் வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஜாமினை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமைச்சர் பதவியா? ஜாமினா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள் என செந்தில் பாலாஜியை நீதிபதிகள் கேட்டனர். இதனையடுத்து மீண்டும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பில் உள்ள கடுமையான சில கருத்துகளை நீக்கக் கோரி, செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓகா ஓய்வு பெற்ற பிறகு இந்த மனுவை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்? என செந்தில் பாலாஜி தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், இதனால் சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் எடுத்துரைத்தார்.
இதனையடுத்து செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது நீதிபதி வாய்மொழியாகக் கூறியது தான் என்றும், ஜாமின் உத்தரவில் அமைச்சராக தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், “செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் அவருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கலைக்க நேரிடும் என்பதால், அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததை கருத்தில் கொண்டு தான் ஜாமின் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தனர். மேலும் அவர் அமைச்சராவதை யாரும் தடுக்கவில்லை என்றும், ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு சாட்சியங்களை கலைத்தால், ஜாமின் ரத்து செய்யப்படும் என்று தான் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விளக்கினர்.
மேலும் இந்த வழக்கை ஏன் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி, இதற்கு இன்னும் 2 வாரங்களில் பதிலளிக்க கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.