ரூ.3 லட்சத்திற்கு 1 மாத குழந்தையை விற்ற பெற்றோர்: 8 பேர் கைது
சென்னை காசிமேட்டில் 1 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்ற வழக்கில் பெற்றோர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
காசிமேடு பவர்குப்பம் 2-வது பிளாக்கை சேர்ந்த தம்பதி சகாயராஜ், திலகவதி. இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திலகவதிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து திலகவதி தனக்கு பிறந்த குழந்தையை விற்க முடிவு செய்ததாக தெரிகிறது.
குழந்தையை விற்பது குறித்து அவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரதீபாவிடம் தெரிவித்துள்ளார். அப்போது பிரதீபா மற்றும் காசிமேட்டை சேர்ந்த வெண்ணிலா, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கவுசல்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து குழந்தையை விற்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள முத்துமலை முருகன் கோயிலுக்கு சென்ற போது ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது அந்த பெண் தனக்கு குழந்தை இல்லாததால் வளர்க்க குழந்தை வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து பிரதீபா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து திலகவதியிடம் இருந்து குழந்தையை பெற்று கிருஷ்ணகிரியை சேர்ந்த தம்பதிக்கு விற்றுள்ளனர். காசிமேட்டில் இருந்து காரில் கிருஷ்ணகிரி சென்று குழந்தையை விற்றுள்ளனர்.

இது குறித்து காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், விசாரணை மேற்கொண்டனர். அதில் திலகவதியிடம் இருந்து ஆண் குழந்தையை பிரதீபா, வெண்ணிலா, கவுசல்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணகிரியை சேர்ந்த தம்பதிக்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்றது தெரிய வந்தது. அதில் ரூ.3 லட்சத்தை திலகவதியும், பிரதீபா ரூ.20 ஆயிரம், வெண்ணிலா ரூ.30 ஆயிரம், கவுசல்யா ரூ.30 ஆயிரம் என பங்கிட்டு கொண்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து திலகவதி, பிரதீபா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணைக்கு பின்னர் குழந்தை விற்பனை தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பி.ஸ்ரீமுரளி காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்று கொண்ட போலீசார் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கிருஷ்ணகிரி விரைந்தனர். அங்கு குழந்தையை வாங்கிய தம்பதியான கிருஷ்ணகிரி மாவட்டம் மோரமடகு சோக்காடி கிராமத்தை சேர்ந்த ராமன் (52), மாதம்மாள் (50) மற்றும் இவர்களுக்கு குழந்தையை வாங்க உதவிய ஈரோடு மாவட்டம் ஓடைபள்ளம் பகுதியை சேர்ந்த கவிதா (44), சேலம் காந்திநகர் நீதிமன்ற சாலை பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (33) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தை மற்றும் கைதான 4 பேருடன் சென்னை வந்த தனிப்படை போலீசார், குழந்தை விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மற்றும் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தை போலீசார் குழந்தை விற்ற தாய் திலகவதி, தந்தை சகாயராஜ், இவர்களுக்கு குழந்தையை விற்க உதவிய பிரதீபா உள்ளிட்ட 8 பேர் மீதும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.