குரூப்-1 முதன்மைத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அப்டேட்!
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண் 4.2005 நாள் 1.4.2025 வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1-ல் உள்ள பதவிகளுக்கு முதன்மை தேர்வு டிசம்பர் 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள 18 மையங்களில் மட்டுமே நடைபெற உள்ளன. இந்த தேர்வுகள் அனைத்தும் முற்பகலில் நடைபெறும்.
தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் 10 தேர்வர்களுக்கு ஒருவர் என நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும்போது ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மையங்களிலும் ஜாமர் பொருத்தப்பட உள்ளது.
தேர்வு எழுதும் நபர்களுக்கு தேர்வு கூடத்திற்கான மையங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால் டிக்கெட் கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும். வினா விடைத்தாள் தொகுப்பில் கருமை நிற மை பேனாக்களைத் தவிர மற்ற மை பேனாக்கள், வண்ண பென்சில்கள், வண்ண மை பேனா ஆகியவற்றை உபயோகம் செய்யக்கூடாது. மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.