பயிற்சியைத் தொடங்கிய பாட் கம்மின்ஸ் - வலிமை பெறும் ஆஸ்திரேலியா
காயம் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியை தொடங்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக டிசம்பர் 4ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டிலும், நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னிலும், கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4 ஆம் தேதி சிட்னியிலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகிய நிலையில், அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் இந்த அணியில் அறிமுக வீரர்களான ஜேக் வெதர்லெட், பிரெண்டன் டாகெட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காயத்தில் இருந்து மீண்டும் வரும் கம்மின்ஸ் தனது பயிற்சிகளை தொடங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நியூ சௌத் வெல்ஸ் மைதானத்தில் பாட் கம்மின்ஸ் தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளதாகவும், அதில் அவர் தனது முழு வேகத்தில் பந்துவீசியதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பிரிஸ்பேனில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் தனது முழு உடற்தகுதியை எட்டுவார் என்றும் கூறியுள்ளது. இதன் மூலம் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் கம்மின்ஸ் விளையாடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.