அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு

அடிலெய்ட் டெஸ்ட்:  ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடந்து முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெல்லும் பட்சத்தில், நடப்பு ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் கஸ் அட்கின்சன் நீக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு வில் ஜேக்ஸ், ஜாக் கிரௌலி, ஆலி போப் உள்ளிட்ட வீரர்களும் பிளேயிங் லெவனில் வாய்ப்பை தக்க வைத்துள்ள நிலையில், ஷோயப் பஷிருக்கும் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மார்க் வுட்டிற்கு மாற்றாக சேர்க்கப்பட்டுள்ள மேத்யூ ஃபிஷருக்கும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போட்டிக்க்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவித்துள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ள பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கடந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய மைக்கேல் நேசர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர்த்து கடந்த போட்டியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருந்த நாதன் லையனிற்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இளம் வேகப்பந்து வீச்சாளர் பிராண்டன் டாகெட் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.