கேரள எல்லையில் நிறுத்தப்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகள்.. பயணிகள் கடும் அவதி
அபராதம் விதிப்பதுடன் பேருந்துகளை பறிமுதல் செய்வதாகக் கூறி, கேரள மாநிலம் சென்ற ஆம்னி பேருந்துகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் கேரள மாநிலத்திற்கு சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உரிய அனுமதி பெறவில்லை, பாதுகாப்பு சான்றிதழ்கள் வைத்திருக்கவில்லை என்று கூறி நேற்று (நவ.8) தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த எர்ணாகுளம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஒவ்வொரு பேருந்திற்கும் தலா ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், நேற்று இரவு முதல் கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என அறிவித்தனர். இந்நிலையில், நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கிளம்பிய ஆம்னி பேருந்துகள், இன்று (நவ.8) காலையில் தமிழக - கேரள எல்லைப் பகுதியான வாளையார் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன.
அப்போது, கேரளாவில் அபராதம் விதிக்கப்படுவதாகவும், வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் பேருந்தை நிறுத்தியுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், பேருந்தை திடீரென நிறுத்தியதால் அதில் இருந்த பயணிகள் ஓட்டுநர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், சுமார் ஒரு மணி நேரம் கழித்து 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மட்டும் கேரளாவிற்கு இயக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக மகளிர் அணி தலைவரும், கோவை மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கேரள மாநிலத்திற்கு சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை, கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள், திடீரென மறித்து பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு, கேரள போக்குவரத்து துறை ரூ.70 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.
ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், பேருந்து செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும், பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாறாக பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு பேருந்துகளை சிறைபிடிப்பது ஜனநாயக அரசாங்கம் செய்யும் வேலை அல்ல. தமிழ்நாடும், கேரளமும் இயற்கையாகவே பிணைப்பு கொண்ட மாநிலங்கள். தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கும் மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்கின்றனர்.