திண்டுக்கல் பேகம்பூரில் சமூக நல்லிணக்க கந்தூரி விழா: 20,000 பேருக்கு அன்னதானம்

திண்டுக்கல் பேகம்பூரில் சமூக நல்லிணக்க கந்தூரி விழா: 20,000 பேருக்கு அன்னதானம்

பேகம்பூரில் ஜாதி மத பேதமின்றி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஜாதி, மத பேதங்களைத் தாண்டி, அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைக்கும் இந்த கந்தூரி விழா, அப்பகுதியின் அடையாளமாகத் திகழ்கிறது.

இந்த கந்தூரி விழாவை, பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த கரீபுன் நவாஸ் கந்தூரி தலைமையிலான 20 நண்பர்கள் கொண்ட குழு ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

விழாவின் முக்கிய அம்சமாக, ஜாதி மத பேதமின்றி சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுடச்சுட தயாரிக்கப்பட்ட பிளேன் பிரியாணி, தால்சா, தயிர் சாதம் மற்றும் கேசரி ஆகியவை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

இன்றைய சூழலில் ஜாதி மத பிளவுகள் அதிகரிக்கும் போது, இது போன்ற விழாக்கள் அவசியமானவைகளாக பார்க்கப்படுகிறது. பொதுமக்கள், விழாவில் கலந்துகொண்டு உணவு பெற்றுச் சென்றதோடு, விழா ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர். சிலர், அடுத்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் நடத்த வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர்.