ஆம்னி பஸ் கட்டணங்கள் 3 மடங்கு உயர்வு... பயணிகள் அதிர்ச்சி

கிறிஸ்துமஸ் முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கும் நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

ஆம்னி பஸ் கட்டணங்கள் 3 மடங்கு உயர்வு... பயணிகள் அதிர்ச்சி
கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதனிடையே, தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தி வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பள்ளி அரையாண்டு விடுமுறையை ஒட்டி பெரும்பாலானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரைக்கு 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். டிசம்பர் 23 ஆம் தேதி 255 சிறப்புப் பேருந்துகளும், டிசம்பர் 24 ஆம் தேதி 525 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. டிசம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 91 சிறப்புப் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், 28ஆம் தேதி ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது . சிறப்பு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இணையதளம் மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.