வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேராசிரியர்களுக்கு அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான ‘வேதியியல் நோபல் பரிசு’ ஜப்பானை சேர்ந்த கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியர் சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவை சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இந்த அறிவிப்பு ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியில் புதன்கிழமை வெளியானது. அப்போது, "உலோக - கரிம கட்டமைப்புகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கான" ஆராய்ச்சிக்காக பல்கலை. பேராசிரியர்களை கௌரவிக்கும் விதமாக இந்த மூவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், கார்பன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி புதிய மூலக்கூறு கட்டமைப்புகளை உருவாக்கும் கண்டுபிடிப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆராய்ச்சி பல்வேறு துறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் எனவும் கூறப்படுகிறது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘நோபல் பரிசு’ ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளின் கீழ் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்வீடனை சேர்ந்த தொழிலதிபரும், வேதியியல் அறிஞருமான ஆல்பிரட் நோபல் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது. இது ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கு அக்.6 ஆம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு மேரி இ.பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று பேருக்கும், அக்.7 ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கில் டிவோர்ட், ஜான் மார்டின்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெறும் நபர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழுடன் ரூ.10.41 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்படும்.