'விஜய்க்கு ஒரு சகோதரனாக சொல்கிறேன்... அரசியலில் நின்னு நிதானமாக செயல்படுங்கள்' - கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்!

'விஜய்க்கு ஒரு சகோதரனாக சொல்கிறேன்... அரசியலில் நின்னு நிதானமாக செயல்படுங்கள்' - கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்!

அரசியலில் விஜய் நிதானமாக செயல்பட வேண்டும் என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சாமி தரிசனம் செய்ய இன்று வருகை தந்தார். கோயிலுக்குள் சென்ற அவர் அங்குள்ள மூலவர் சண்முகர், வள்ளி, தெய்வானை தட்சிணா மூர்த்தி, சத்ரு சம்கார மூர்த்தி மற்றும் பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். கோயிலிலிருந்து வெளியே வந்த அவருக்கு பக்தர்கள் வாழ்த்து தெரிவித்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவராஜ் குமார், ''டிசம்பர் மாதம் அனைத்து மொழிகளிலும் '45' என்ற படம் வெளியாக உள்ளது. தற்போது 'பெயில்' என்ற திரைப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயிலர் 2ம் பாகத்திலும் நடித்து வருகிறேன். சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இன்று திருச்செந்தூர் வந்தேன்'' என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளது குறித்து கேட்டதற்கு ''எங்கு நிம்மதி கிடைக்கிறதோ அங்கு செல்வது வழக்கம். அவர் இமயமலைக்கு செல்வது வழக்கமான ஒன்று தான். ரஜினிகாந்த் வேறு மாதிரியான ஒரு மனிதர்'' எனத் தெரிவித்தார்.

விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர் ''விஜய் அரசியலுக்கு வந்த போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழ்நாடு அரசியல் குறித்து எனக்கு பெரிய அளவில் தெரியாது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மகன் ஆகியோரை நன்றாக தெரியும். அது மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளையும் தெரியும். விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வந்துள்ள அவருக்கு 'ஆல் த பெஸ்ட்'. கரூர் துயர சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்று எனக்கு தெரியாது. விஜய் என்ன ஸ்டெப் எடுத்து வைத்தாலும் யோசித்து நிதானமாக எடுத்து வைக்க வேண்டும் என்று ஒரு சகோதரராக கூறுகிறேன்'' என்று தெரிவித்தார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.