நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள்! முர்முக்கு குடும்பத்தினர் கடிதம்
சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை, ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருமாறு அவரது குடும்பத்தினர் சார்பில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பிரிட்டிஷாருக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை (INA) நிறுவி, ஆங்கிலேய படைகளை நடுநடுங்க வைத்தவர்.
அகிம்சை வழியை மகாத்மா காந்தி கையில் எடுத்த சமயத்தில், ஆங்கிலேயர்களை விரட்ட ஆயுதப் போராட்டத்தை தேர்வு செய்தவர் சுபாஷ் சந்திர போஸ். எனினும், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அவர் இறந்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால், அவர் எப்படி இறந்தார்? எங்கு இறந்தார்? அவரது உடல் என்னவானது? என அனைத்துமே இப்போது வரை மர்மமாக உள்ளது.
தைவான் தலைநகர் தாய்பேயில் நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் அவர் இறந்ததாக ஒரு தரப்பினரும், மற்றொரு நாட்டின் சிறையில் இருந்தபடியே அவர் இறந்ததாக மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இருந்த போதிலும், சுபாஷ் சந்திர போஸின் உடலை எரித்த அஸ்தி, ஜப்பானில் உள்ள ரெனோக்கி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. ஆனால், போஸ் குடும்பத்தினர் பல முறை கோரிக்கை விடுத்தும், அவரது அஸ்தி இந்தியாவுக்கு கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில், சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், "சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியா கொண்டு வருமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அவர் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இதே கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரது நினைவாக வைத்தால், அது எதிர்கால தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும். எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் உதவி செய்ய வேண்டும்" என சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.