கரூர் சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் - பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கரூர் துயர சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்று பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினார்.
நயினார் நாகேந்திரன் (பாஜக): கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டியிருந்தால் நீதிமன்றத்துக்கு சென்றே அனுமதி பெறக்கூடிய நிலை இருந்து வருகிறது. அதேநேரத்தில் ஆளுங்கட்சியினர் கூட்டம் என்றால் காவல்துறை உடனடியாக அனுமதி வழங்குகிறது. தவெக கட்சி நிர்வாகிகள் கேட்டிருந்த கரூர் ரவுண்டாணா பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி அளித்திருந்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்காது. விஜய் பாட்டீலுக்கு 10 ரூபாய் என்று பாடல் பாடிய பிறகே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் திடீரென செருப்பை வீசியது யார். கூட்டத்துக்குள் ரவுடிகள் புகுந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பொதுவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு சரியான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது கிடையாது. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியம். கரூர் சம்பவம் காவல்துறையின் கவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவம் என்று சொல்லி எங்கள் கட்சி சார்பில் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்) : கரூர் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. கரூர் துயர சம்பவத்தில் முதல்வர் உடனடியாக மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்ட அவர்களுக்கு மனமில்லை. மதத்தின் மீது அரசியல் செய்கிறவர்களை பார்த்திருக்கிறோம். இப்போது மரணத்தின் மீது அரசியல் செய்கின்றனர். கரூர் விவகாரத்தில் தமிழகஅரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும்.
ஜி.கே.மணி (பாமக) : இதுபோன்ற வேதனையான சம்பவம் இனி நிகழாமல் இருக்க அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை நிலையைஅரசு வெளிக்கொண்டுவர வேண்டும்.
எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற எங்கள் கட்சி தலைவரின் கோரிக்கையையும் முதல்வரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு): கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு துயரமான நிகழ்வு. கரூர் சம்பவத்தை அரசு இயந்திரம் சிறப்பாக கையாண்டது. அரசின் விரைவான நடவடிக்கைகளுக்கு நன்றி.
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்: எதிர்பாராத துயரம் சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்றவர் தமிழக மக்களை எப்படி பாதுகாக்கப் போகிறார்? தேர்தல் காரணமாக கரூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விஜய்க்கு முட்டுக்கொடுக்கின்றன.
எம்.பூமிநாதன் (மதிமுக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஈ.ஆர். ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), தி.வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்டோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
காலணி வீசப்பட்டது எப்போது? - பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் போகுதே என பாட ஆரம்பித்தபோது தான் அவர் மீது காலணி வீசப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்தே ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காவல்துறை தடியடி நடத்தியிருக்கிறது என்றார்.
இளைஞர் துரைமுருகன்... தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நீர்வளத்துறை தொடர்பான கேள்வி வந்தபோது, அமைச்சர் துரைமுருகன் சிரமப்பட்டு எழுந்து பதில் அளிக்க முயன்றார். அப்போது, பேரவைத் தலைவர், ‘‘அமைச்சர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். இருந்தாலும் தயவு செய்து அமர்ந்தே பதில் அளியுங்கள்” என்றார். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், “என்னை வயதான ஆளாகவே காட்டப் பார்க்கிறீர்களா?’’ என கேட்டதும் அவை முழுவதும் சிரிப்பலையில் மிதந்தது.
ரத்த அழுத்தம் கூடிவிட்டதா? - அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு பட்டையை அணிந்து வந்தனர். கேள்வி நேரத்தில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேச தொடங்கியபோது, என்ன எல்லோரும் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள். கருப்பு பட்டை கட்டிய உடனே எல்லோருக்கும் ஒன்று போல ரத்த அழுத்தம் கூடிவிட்டதா? என பேரவைத் தலைவர் மு.அப்பாவு கிண்டலாக கேள்வி எழுப்பியதும், அவையே சிரிப்பலையில் அதிர்ந்தது. அதற்கு பதில் அளித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “உங்கள் கவனத்தை ஈர்க்கத்தான்” என்றார். உடனே அமைச்சர் ரகுபதி, “கைதிகளுக்குதான் இப்படி அடையாளம் கொடுப்பார்கள்” என்றார்.
குறுக்கிட்ட பாமக எம்எல்ஏக்கள்.. தமிழக சட்டப்பேரவையில் நேற்று அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் எழுந்து சட்டப்பேரவை குழுத் தலைவர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி கோரி கூச்சலிட்டனர். கேள்வி நேரத்தில் முக்கிய மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதால், கேள்வி நேரம் முடிந்த பிறகு உங்களுக்கு நேரம் அளிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்