''குழந்தைகளுக்கான கல்வி நிதியில் ஒன்றிய அரசு விளையாட வேண்டாம்'' - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு தர வேண்டிய கல்வி நிதியை விடுவிக்காமல் பல்வேறு விதிமுறைகளை வகுத்து, குழந்தைகளின் எதிர்காலத்தில் ஒன்றிய அரசு விளையாட வேண்டாம் என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 167 உதவியாளர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசுகையில், ''பல லட்சம் பணியாளர்களை கொண்ட குடும்பம் பள்ளிக்கல்வித்துறை. நம்மை அனைவரும் ஒன்றாக அமரக்கூடிய அளவில் உருவாக்கியது நம் படித்த கல்வி தான். உலகமே தமிழ்நாட்டை பார்த்து வியப்பதற்கு நம் மனிதவள மேம்பாடு தான் காரணம். புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணியில் எங்களோடு நீங்கள் இணைந்திருப்பதற்கு வாழ்த்துகள்." என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பேசினார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், ''கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்களை சேர்த்தவர்களை கௌரவித்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் டிஎன்பிஎஸ்சி மூலமாக 167 இளைய சமுதாயத்தை சார்ந்த பிள்ளைகளுக்கு உதவியாளர் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை என்பது ஒரு மிகப்பெரிய குடும்பம் அந்த குடும்பத்தில் இன்றைக்கு புதிய உறுப்பினர்களாக 167 நபர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே இருக்கின்ற உயர் அதிகாரிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் உதவியாளர் பணிகளில் இணைய உள்ளனர்.
இரு அரசின் பங்கினை செலுத்திய பின் ஒன்றிய அரசு வழங்கும் நிதியினை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவோம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகவே ஏதேதோ காரணங்கள் கூறி நிதியினை வழங்காமல் இருக்கின்றனர். அதையும் கடந்து துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு வரவேண்டிய நிதி இன்னும் வராமல் இருப்பதினால் ஒரு குழப்பமான நிலையை ஒன்றிய அரசு உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால் அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வராது என்று தெரிந்து கொண்டு இன்று நிதியினை விடுவித்துள்ளனர்.
தமிழக மக்கள் சார்பாக நான் ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் அமைத்து குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் கடந்த கல்வி ஆண்டில் இணைந்த மாணவர்களிடம் பெறப்பட்ட கல்வி கட்டண தொகையினை மீண்டும் மாணவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என, கல்வி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளோம். இதற்கு கால அவகாசம் வரும் 17 ஆம் தேதி வரை அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.