மழையினால் நீர் வரத்து அதிகரிப்பு: பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு

மழையினால் நீர் வரத்து அதிகரித்து வருவதால், சென்னை குடிநீர் ஏரிகளான, பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து இன்று (புதன்கிழமை) மதியம் உபரி நீர் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள ஆந்திர பகுதிகள் மற்றும் பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகள், ராணிப்பேட்டை மாவட்டப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, கொசஸ்தலை ஆறு மற்றும் கல்லாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அவ்வாறு வரும் வெள்ள நீராலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீராலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
ஆகவே, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 3,047 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 34.70 அடியாகவும் உள்ளது. எனவே, பூண்டி ஏரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 16 மதகுகள் கொண்ட இந்த ஏரியிலிருந்து, உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் இன்று மதியம் 2 மணியளவில் நீர் வள ஆதாரத் துறையினர் திறந்தனர்.
இரு மதகுகளில் விநாடிக்கு 700 கன அடி என திறக்கப்பட்டுள்ள இந்த உபரி நீர், பூண்டி ஏரியில் இருந்து சுமார் 23 கி.மீ., தூரம் உள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கு சென்ற பிறகு, அங்கிருந்து மேல் வரத்து கால்வாய் மூலம் சோழவரம் ஏரிக்கு அனுப்பப்பட்டு சேமித்து வைக்கப்பட உள்ளது.
அதே போல், சென்னைக்கு குடிநீர் தரும் மற்றொரு ஏரியான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், இன்று காலை புழல் ஏரியில் 3,006 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 19.97 அடி நீர் மட்டமும் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மதியம் 2 மணியளவில் புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 200 கன அடி உபரி நீரை நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகள் திறந்துள்ளனர். ஆகவே, பூண்டி ஏரி மற்றும் புழல் ஏரியின் உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்கள் மற்றும் புழல் ஏரி உபரி நீர் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நீர் வள ஆதாரத் துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.