திராவிடத்தை அழித்தொழிப்பது ஒருக்காலமும் நடக்காது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு
75 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட திராவிடத்தை அழித்தொழிப்பது ஒருக்காலமும் நடக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
மயிலாடுதுறையில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. துணை பொதுச்செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், "தமிழகத்தில் மீத்தேன், ஷேல்காஸ், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நடைமுறை படுத்துவதை தடுக்க நடைபயணம் மேற்கொண்டேன். அதேபோல், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்கவும், மேகதாதுவில் கர்நாடகா அணைகட்டுவதை தடுப்பதற்கும், தமிழகத்தில் உரிமைகள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன்.
அதேபோல், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தமிழுக்காக போராடியவர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். தற்போது மீண்டும் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதை தடுக்கும் வகையில் மொழிப்போர் தியாகிகள் தினத்தில் தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களிலும் தமிழக அரசு கூட்டம் நடத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திலிருந்த் திமுகவை துடைத்து எறிவோம் என்று சொல்லியிருக்கிறார். 75 ஆண்டுகால பாரம்பரிய வரலாறு கொண்ட இந்த இயக்கத்தை துடைத்தெறிய முடியாது. திராவிட இயக்கத்தின் ஒரு அங்கம்தான் நாங்கள். திராவிட இயக்கத்தை அழித்து இந்துத்துவா சக்திகளை கொண்டுவந்து திணிக்க முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அலகாபத்தில் நடைபெற்ற தர்ம சன்சத் மாநாட்டில், இனிமேல் இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு ஓட்டுரிமை, குடியுரிமை கிடையாது. இந்தியும் சமஸ்கிருதமும்தான் இருக்கும். வாரணாசி தலைநகராக்கப்படும் என்று தீர்மானம் எடுத்திருக்கிறார்கள். காந்தி பெயரை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். அடுத்து கரன்சி நோட்டிலிருந்தும் காந்தி படத்தை அகற்ற முயற்சி செய்வார்கள். இந்துதுவா சக்திகள் இங்கே பிரவேசிக்க விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது.
எனது இயக்கத்தினர் தோல்விகள், பரிகாசங்களை கண்டு கவலைப்படுவதில்லை. இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்துபோராடுவேன். இந்துத்துவா சக்திகள் மதுராந்தகத்தில் கூட்டம்போட்டு கூச்சல் போடலாம். வரும் சட்டசபை தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். செந்தமிழ் மொழியை, நாட்டின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு நான் தொடர்ந்து பாடுபடுவேன். தாய்மொழிக்காக உயிர் நீத்தவர்களுக்கு எங்கள் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்" என்றார்.