”ஐ வாண்ட் பீஸ், மிஸ் ஆனா ரத்தக்களறி தான் வரும்” ஹமாஸ், இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப் - இன்று தீர்வு?

அமைதி ஏற்பட முன்வராவிட்டால் பெரும் ரத்தக்களறி ஏற்படும் என, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், “அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டம் இந்த வாரத்திற்குள் முற்றுப்பெற வேண்டும். அனைவருமே வேகமான முன்னேற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நூற்றாண்டின் மிகவும் பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிக்கிறேன். காலம் என்பது மிகவும் முக்கியமானது இதனை தவறவிட்டால் பெரும் ரத்தக்களறி ஏற்படக்கூடும். அதனை யாருமே பார்க்க விரும்பவில்லை” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
காஸா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் மற்றும் மற்ற நாடுகளிடையே, நேர்மறையான விவாதம் நடைபெற்று வருவதாக ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனது பதிவில், “ஹமாஸ் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகளிடம் இந்த வாரம் நேர்மறையான விவாதம் இருந்தது. பணயக் கைதிகளை விடுவிப்பது, காஸா போரை நிறுத்துவது, இறுதியாக மற்றும் மிகவும் முக்கியமாக மத்திய கிழக்கு பகுதியில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்தது, வேகமாகவும் முன்னேறியது. தொழில்நுட்ப குழுவினர் திங்கட்கிழமை அன்று எகிப்தில் கூடி இறுதி முடிவுகளை எடுக்கும்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
20 அம்சங்களை உள்ளடக்கிய காஸா அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்தார். அதனை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் குழு ஏற்றுக்கொள்ளாவிட்டால், நரகத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என எச்சரித்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு, காஸா அமைதித் திட்டத்தின் சில பகுதிகளை ஹமாஸ் குழு ஏற்றுக்கொண்டது. அதில், ”போரை முடிவுக்குக் கொண்டுவருதல், இஸ்ரேல் காசாவில் இருந்து பின் வாங்குதல், இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல், உதவி மற்றும் மீட்பு முயற்சிகள் மற்றும் பாலஸ்தீன மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு” ஆகியவை அடங்கும்.
அதன்படி, ஹமாஸ் குழுவினர் விரைந்து செயல்பட்டு இஸ்ரேலுடனான சமாதான ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளுமாறும்m, தவறினால் காஸாவில் மேலும் பேரழிவை ஏற்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். அதோடு, காஸாவில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அறிவுறுத்தினார். ஆனால், அந்த எச்சரிக்கைக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காஸாவில் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் மூலம், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் இருதரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி நடந்தால், முதற்கட்டமாக இருதரப்பிலும் உள்ள பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.